Saturday, May 8, 2010

மிட் நைட்டில் ஒரு மியூசிக் கம்போசிங்!


சரிகமபதநி... ய சரியாச் சொன்னவங்களே அடுத்த நாள் பேப்பர்ல, அதுவும் ஆறாம் பக்கத்துல 'காணவில்லை' அந்தஸ்துக்கு வந்திர்றாங்க. இந்த லட்சணத்தில ஒரு படத்துக்கு மியூசிக் போட்டு, இரண்டாவது படத்துக்கு டைரக்டர தேடி, மூணாவது படம் வர்றதுக்குள்ளே ஆர்மோனிய பொட்டிய அடகு வைக்கிற அளவுக்குதான் இருக்குது புது இசையமைப்பாளருங்களோட போட்டியும், அவங்களை வழி நடத்துற வறுமையும்! இதுல வந்த வாய்ப்பை விடவும் முடியாம, போன இடத்துல ஆர்மோனிய பொட்டிய தொடவும் முடியாம தவிச்ச இசையமைப்பாளரோட கண்ணீர் கதைதான் இது.

ம-வில் ஆரம்பிக்கும் இவரது பெயர், ர்-ல் முடியும்னு சொன்னாலும் ஈசியா கண்டுபிடிக்க முடியாது உங்களால. அதுவும் நல்லதுக்குதான்னு அடுத்த வரிக்கு போவலாம். இவரு இசையமைச்ச முதல் படம் சுமாரா போச்சு. ஆனா சூப்பரா போச்சுன்னு விளம்பரமும் கொடுத்தாங்க. அந்த படத்துல ஒரு அரசியல்வாதியும் நடிச்சதால ஒரு டிக்கெட் வாங்கினா அதுவே இலவசம். அதுக்கொரு பிரியாணியும் இலவசம்னு படத்தை ஓட்டினாரு அவரு. சில தியேட்டர்ல முன்னாடி உட்காந்திருக்கிறவன குனிய வச்சு அவன் முதுகுல பிரியாணி பொட்டலத்தை பிரிச்சு வச்சு திங்கிற அளவுக்கு குவார்ட்டரையும் குடுத்து கொண்டாட விட்டுடாய்ங்க ரசிகருங்களை. அவரோட அடுத்த படத்துக்கும் இவர்தான் மியூசிக்குன்னு புக் பண்ணியிருந்தாங்க.

முதல் படத்திலேயே நல்ல சம்பளம், கம்போசிங், மிக்சிங்குன்னு ஏராளமா செலவு பண்ணியிருந்தாரு பொலிட்டிஷியன். அதனால் இந்த படத்துக்கும் நல்லா செலவு செஞ்சு நம்ம பேர நிலை நாட்ட விட்ருவாருன்னு நம்பி தலைய ஆட்டுனாரு நம்ம மியூசிக் டைரக்டரு.

ஈசிஆர் ரோட்ல ஒரு பிரமாதமான கெஸ்ட் அவுஸ்ல கம்போசிங்கை வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு அரசியல்வாதி. தனது வாத்திய கோஷ்டியோடு போய் சேர்ந்திட்டாரு மியூசிக் டைரக்டர். போன இடத்திலே அவருக்கு கிடைச்ச அனுபவம் இருக்கே, அதை அனுபவிச்சதுக்கு பதில் கோவேறு கழுதைக்கு குனிஞ்சு குனிஞ்சு கொலுசு கட்டியிருக்கலாம். அப்படி ஒரு பேரவஸ்தை!

சர்புர்ருன்னு வண்டிங்க வந்து நின்னுச்சு. உள்ளேயிருந்து இறக்கப்பட்ட ஐட்டங்கள் எதுவும் அந்த சூழ்நிலைக்கு பொருந்தற மாதிரி இல்ல. உசிரோட கிடந்திருந்தா ஊருபட்ட புள்ளைங்களை பெத்திருக்கும். அப்படி ஒரு கிடாவை வெட்டி கொழம்பு வச்சிருந்தாய்ங்க. இந்த பக்கம் தந்து£ரியில அவிஞ்சு தகதகன்னு கெடக்குது வெடக்கோழிங்க கூட்டம். இதையெல்லாம் பார்த்த மியூசிக் டைரக்டருக்கு சரிகம வருமா, அல்லது ஜலம்தான் வருமாங்கிற அளவுக்கு நாக்குல தண்ணி வண்டி உருளுது. அந்தப்பக்கம் தலைய கூட திருப்பாமலே ஆர்மோனியத்தை தடவிக்கிட்டு இருந்தவருக்கு அடுத்ததா வந்து இறங்கின ஐட்டமும், ஆளும்தான் அதிர வைச்சுருச்சு.

ஐட்டத்தை விட்ருங்க. ஆள மட்டும் சொல்றேன். வடிவேலு! பவ்யமா கும்புட்டுட்டு "சாரு, நல்லாயிருக்கீங்களா"ன்னு சொல்லிகிட்டே மெத்தையில உட்காந்திட்டாரு மனுஷன். அப்படியே ஆர்மோனியத்தை பார்த்துகிட்டே ஒரு ராகத்தை எடுத்துவிட்டவரு, "என்னாப்பா இருக்குது அந்த குண்டாக்குள்ள? எடு பார்க்கலாம்"னு சொல்லிக்கிட்டே கைய விட்டாரு. வெளியே எடுக்கும்போது சரியான தொடக்கறி. அத நாக்குல விட்டு நைய பொடச்சுக்கிட்டே, "போன படத்தில ஒரு பாட்டு போட்ருந்தீங்கண்ணே, நல்லாயிருந்துச்சு. எங்க பாடுங்கண்ண்ணேய்..." னாரு. இவருக்கு எங்கயிருந்து பாட்டு வரும். வாயெல்லாம் ஊறி எச்சில்தான் வந்துச்சு. இருந்தாலும் ஆர்மோனியத்துல விரல்களை தவழவிட்டுக் கொண்டே ஒரு பாடலை பாட, எதிரே இருந்த வடிவேலு "எங்கடா அந்த கிளாசு"ன்னு கேட்டுக்கொண்டே அதை கைப்பற்றி எதையோ ஊற்றி கல்ப்பாக ஏற்ற ஆரம்பித்திருந்தார்.

ஆங் சொல்ல மறந்திட்டேன். இந்த ஜமாவுல வடிவேலு மட்டுமில்ல. அந்த அரசியல்வாதி. அவரோட நண்பர்கள்னு ஒரு நாலைஞ்சு பேரு குவிஞ்சுட்டாங்க. ஒரு சுச்சுவேஷன் சொல்றன்னு பேச ஆரம்பிச்சாரு ஒருத்தரு. அவருதான் டைரக்டரு போல. வரும்போதே நிரம்பி தளும்பி வந்திருந்தாரு மனுசன். இங்க வந்து இன்னும் நனைஞ்சுட்டாரா? ஃபுல் ஸ்டாப்பே இல்லாம ஒரு சுச்சுவேஷன் போயிட்டு இருந்திச்சு. அவரு நிறுத்தினாதானே இவரு ஆரம்பிக்க முடியும். இடையில அவரு நிறுத்தறது ஊறுகாய தொட்டு நாக்குல வச்சுக்கறதுக்கு மட்டும்தான்னு ஆயிருச்சு.

அதுக்குள்ளே இடையில புகுந்த வடிவேலு, "அத விடுண்ணே. அந்த காலத்துல பாகவதர் போட்ட பாட்டு இது. இதுக்கு இணையா ஒரு பாட்ட சொல்லு பாப்பம்"ன்னு ஒரு பாடலை எடுத்துவிட, "அவரு என்னா அவரு. இவர கேளு"ன்னு இந்த பக்கம் வேறொருத்தர் கிட்டப்பாவுக்கு தாவியிருந்தாரு. மாறி மாறி ரேடியோ ஸ்டேஷன திருப்பி, மண்டைக்குள்ளே கம்பிய சொருகிறாய்ங்களேன்னு கண்ணுல தண்ணியே வந்திருச்சு மியூசிக் டைரக்டருக்கு. இருந்தாலும் பாட்டுக்கு நடுவில ஒரு தொட கறிய குடுத்தா, வாய்லேர்ந்து வழியறத நிறுத்தலாம்னு நினைச்சவருக்கு பேச்சுக்கு கூட, "...ந்தா"ன்னு நீட்டல ஒருத்தரும்.

அதுக்குள்ள கஷ்டப்பட்டு அத்தனை பேரையும் கதைக்குள்ள இழுத்திட்டு வந்தாரு டைரக்டர் என்று சொல்லப்பட்ட அந்த 'தண்ணி' லாரி. ஒருவழியா இவரு சுச்சுவேஷனை சொல்லி முடிக்க, ஆர்மோனிய பொட்டியில் விரல்களை மேய விட்டாரு நம்மாளு. தானே டம்மியாக சில வார்த்தைகளை போட்டு அவர் பாட பாட கண்கள் சிவந்தது வடிவேலுவுக்கு. "என்னாய்யா வரி போடுற நீ. முன்ன பின்ன கம்போசிங்(?) பண்ணியிருக்கியா? இப்படியாய்யா சுத்த தமிழ்ல பாடுவான் ஒரு மனுசன்? தள்ளுய்யா அந்தாண்ட..." என்று மியூசிக் டைரக்டரை மெத்தை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு ஆர்மோனிய பொட்டியை கைப்பற்றினார்.

பெருங்குரலில் பாட ஆரம்பிச்சாரு மனுசன். கைகள் கண்ணாபின்னாவென்று ஆர்மோனிய பொட்டியில் ஓட, அவரது வாய் உச்சரிச்ச வார்த்தைங்க ஒவ்வொன்ணும் காது கொள்ளாத கெட்ட வார்த்தைகள். காதுல பினாயில் விட்டு கழுவினா கூட நாலு வருஷத்துக்கு மறக்காது. அப்படி ஒரு நரகா'சுரம்'. ஒரு முழு பாடலையும் எதுகை மோனை ட்யூனோட அவரு போட்டு முடிப்பதற்குள் நம்ம மியூசிக் பார்ட்டிக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருந்தது.

எப்புடீய்யா...ன்னு கேட்டு இவர் முடிக்கும்போது நைசாக எழுந்து வெளியேறியிருந்தார். என்னதான் வளர்ற மியூசிக் டைரக்டரா இருந்தாலும், ஆர்மோனிய பொட்டியிலேர்ந்து 'ஜால்ரா' சத்தமா வரும்?

10 comments:

King Viswa said...

அந்தணன் அண்ணே,
வழக்கம் போல நான் தான் பஸ்ட்.

King Viswa said...

//அதை அனுபவிச்சதுக்கு பதில் கோவேறு கழுதைக்கு குனிஞ்சு குனிஞ்சு கொலுசு கட்டியிருக்கலாம். அப்படி ஒரு பேரவஸ்தை!//

அல்டிமேட் அந்தணன் டச்.

மக்களே, அந்தணனின் அற்புத பொன்மொழிகள் புத்தகத்தை நான் தான் வெளியிடுவேன் - போட்டிக்கு வந்துராதீங்க.

vicks said...

Music director - Maria Manogar!!!!!! Pooe guy! Pitty for him

Unknown said...

ஸ்டார்ட் மியூசிக் ...

Anonymous said...

Nayagan
Directed by Saravana Sakthi
Produced by Shakya Celluloid
Written by Vijaykumar Reddy
Starring J. K. Rithesh
Ramana
Sangeetha
Anitha
Keerthi Chawla
Anand Raj
Radha Ravi
Pandiarajan
Sriman
Music by Mariya Manohar
Release date(s) 22 August 2008

Sridhar said...

// கோவேறு கழுதைக்கு குனிஞ்சு குனிஞ்சு கொலுசு கட்டியிருக்கலாம் //

எங்கேந்து இப்படி புடிக்கிறீங்க. கலக்கல்

அண்ணாமலையான் said...

super

சேலம் தேவா said...

கூட இருந்து அனுபவிச்ச மாதிரியே எப்படிண்ணே எழுதிரிங்க .அடிக்கடி எதிர் பாக்கிறேன்.சூப்பர்.

சேலம் தேவா said...

போட்டோவும் சூப்பர் .

பனித்துளி சங்கர் said...

////மூணாவது படம் வர்றதுக்குள்ளே ஆர்மோனிய பொட்டிய அடகு வைக்கிற அளவுக்குதான் இருக்குது புது இசையமைப்பாளருங்களோட போட்டியும், அவங்களை வழி நடத்துற வறுமையும்!////////


இன்று நமது சோகங்களின் கண்ணீர் துடைக்கும் பல இசைகளுக்கு பின்னால் . பல கண்ணீர் சிந்தும் வறுமைகளும் ,உழைப்பும் இருக்கத்தான் செய்கிறது . பகிர்வுக்கு நன்றி !